• தேர்வு எடுக்கும் ஆண்டில் 8 வயதைப் பூர்த்தி செய்யும் பரீட்சார்த்தியே முதலாவது தரத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.

  • பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களே ஆசிரியர் தரத்துக்கான தேர்வில் தோற்ற அனுமதிக்கப்படுவர்.

  • தேர்வுக்குத் தோற்றும் தரத்துக்கு முன்னைய தரத்தில் பரீட்சார்த்தி தேர்வாகியுள்ளதனைச் சான்றிதழ் மூலமாகவோ அல்லது அத்தரத் தேர்வுக்கு   விண்ணப்பிக்கும் தகுதியைப் பரீட்சார்த்தி கொண்டிருக்கின்றார் என்ற ஆசிரியரின் அத்தாட்சிக் கடிதத்தினூடாகவோ உறுதிப்படுத்தும் மாணவரே தேர்வுக்குத் தோற்ற முடியும்.

  • பரீட்சைகளை எடுக்க விரும்பும் பரீட்சார்த்தி, தேர்வுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டிய கால எல்லைக்குள் செலுத்தித் தம்மைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

  • நோர்வே நுண்கலை மன்றத்துக்குத் தேவையான தம்மைப் பற்றிய விபரங்களைப் பரீட்சார்த்திகள் வழங்க வேண்டும்.

  • பரீட்சார்த்திகள் தம்மைப்பற்றிப் பிழையான தகவல்கள் தந்திருந்தால் அல்லது தேர்வுகளில் முறையீனமாக நடந்து கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்குத் தேர்வுகளிலோ அல்லது நோர்வே நுண்கலை மன்றத்தின் செயற்பாடுகளிலோ அவர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  • தேர்வுகள் நடைபெறும் இடத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகப் பரீட்சார்த்திகள் வருகைதர வேண்டும். பரீட்சைகள் ஆரம்பித்த பின்னர் வருகைதரும் பரீட்சார்த்திகள் பரீட்சைகளை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்களால் தேர்வுக்காகச் செலுத்தப்பட்ட பணமும் திரும்பச் செலுத்தப்பட மாட்டாது. மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் அல்லது ஏற்றுக் கொள்ளத்தக்க தவிர்க்க முடியாத காரணங்களை உறுதிப்படித்தினால் முழுமையான அல்லது பகுதியான தேர்வுக்கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

  • அறிமுறை, செய்முறைப் பரீட்சைகள் யாவும் தமிழிலேயே நடத்தப்படும். தமிழில் போதிய தகைமை இல்லாத மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது நோர்வேஜிய மொழியிலோ பரீட்சைகளை எடுப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

  • தேர்வின் பெறுபேறுகள் வெளிவந்து மூன்று கிழமைகளுக்குள், விரும்புபவர்கள் எழுத்துமூலமாக மீள்பரிசீலனைக்குரிய பணத்தினைச் செலுத்தித் தமது விடைத்தாள்களை மீள்பார்வைக்குக் கோரலாம். பெறுபேறுகளில் மாற்றம் இருந்தால் மீள்பரிசீலனைக்குரிய பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

  • ஏதாவது காரணங்களுக்காகத் தேர்வுகள் பிற்போடப்படும் பட்சத்தில் அதற்கான அறிவித்தல்கள் வழங்கப்படுவதுடன் தேர்வுக் கட்டணங்களும் திருப்பிக் கொடுக்கப்படும்.